மதுரை மாவட்டம் முழுவதும், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலையில் காசி விஸ்வநாதர் கோயில் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழி பலியிட்டு கந்தூரி விழா நடத்தப்படும் என தர்கா நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து திருப்பரங்குன்றம் மலைக்கு ராமநாதபுரம் எம்பி நவாஸ்கனி ஆட்களுடன் பார்வையிட்டார். அப்போது எம்பியுடன் வந்தவர்கள் மலைப்பகுதியில் அசைவ உணவு சாப்பிட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் திருப்பரங்குன்றம் மலையை பாதுகாக்க வலியுறுத்தி நாளை இந்து முன்னணி மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 16 கால் மண்டபம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தற்பொழுது மதுரை மாவட்டம் முழுவதும், இன்றும், நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மதுரையில் போராட்டங்கள், தர்ணா, பொதுக்கூட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையே அசாதாரண சூழலுக்கு வாய்ப்புள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் தடையை மீறி திருப்பரங்குன்றம் கோவில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இந்து முன்னணி அமைப்பு திட்டமிட்டுள்ளது. இதனால் மதுரை மாவட்டம் முழுவதும் இன்றும், நாளையும் தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.