ஆதார் அட்டை என்பது பல துறைகளிலும் நாம் பயன்படுத்தக் கூடிய, அவசியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. வங்கிக் கணக்கு, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு எனப் பலவற்றுடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் அடையாள அட்டையை தற்போது மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 100 யூனிட் இலவச மின்சார மானியம் பெறுவதற்கு மின் நுகர்வோர் அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு சார்பில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. தற்போது, மின் நுகர்வோர் அட்டையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மூலம் OTP பெறப்பட்டு ஆதார் இணைக்கப்படுகிறது. ஆதார் அட்டை எண், பெயர் பதிவிட்ட பிறகு நுகர்வோர் சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை நகல் பதிவேற்றம் செய்ய வேண்டும். நுகர்வோர் சமர்ப்பித்த விவரங்கள் அந்தந்த பிரிவு அலுவலகத்தின் உதவி பொறியாளரால் சரிபார்க்கப்பட்டு அவை அங்கீகரிக்கப்படும். இந்நிலையில் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதில் உள்ள சிக்கலைப் போக்க எளிதாக மாற்றம் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ” மின் இணைப்புடன் ஆதார் நகல் சமர்பிப்பதால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படுவதாக புகார் எழுகிறது. இதனால் ஆதாருக்கு மாற்றாக OTP முறை அல்லது கைரேகை முறை பயன்படுத்தலாம் என மின்நுகர்வோர் பலர் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, மின்வாரியம் தற்போது புதிய முறையை சோதனை செய்து வருகிறது. அதன்படி மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பில் ஆதார் நகல் இல்லாமல் OTP முறையில் இணைக்கும் வசதி சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனை முடிந்ததும், விரைவில் நுகர்வோர் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும். இந்த வசதி மூலம் ஆதார் இணைக்க, மின் நுகர்வோர் தங்கள் மின் நுகர்வோர் அட்டை மற்றும் ஆதார் அட்டை இரண்டிலும் ஒரே மொபைல் நம்பர் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்” என்று கூறினர்.