நான்கு வருடம் வண்டி ஓடும், நான்கு வருடம் முடிந்த பிறகு பொங்கல் தொகுப்பில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் என்று பாருங்கள் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரையாம்புதூர் பகுதியில் பாஜகவின் 8 ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, “கடந்த 8 ஆண்டுகளில் 14 லட்சம் பேர் கான்கிரீட் வீடுகளைக் கட்டி சொந்த வீடுகளில் வாழ்வதாகவும், இந்தியாவில் பெண்களுக்கு வெறும் 2 சதவீத சொத்து மட்டும்தான் இருப்பதாகத் தெரிவித்த அவர், அந்த நிலை மாறி தற்போது 68 சதவீதம் பெண்களுக்கு அவர்களது பெயரில் பாஜக அரசு வீடு கட்டிக் கொடுத்துள்ளதாகக் கூறினார்.

செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் முதலமைச்சர் வெள்ளை சட்டையை மாட்டிக்கொண்டு குறுக்கா மறுக்கா போய்ட்டுருக்கார் என விமர்சித்த அவர், திமுக அமைச்சர்களுக்குப் புதுப்பழக்கம் ஒன்று வந்துள்ளது. அதாவது, செல்லமாக அடிப்பது. தா மோ அன்பரசன் இதேபோன்று கையை ஓங்கி அடிக்கப் போனார் எனக் குறிப்பிட்ட அவர், சாதாரணமாக மக்களை அடிப்பதுதான் திமுகவின் திராவிட மாடல் ஆட்சி எனச் சாடினார். பெரியார் பெயரில் உள்ள பல்கலைகழத்தின் வினாத்தாளில் எது கீழ் சாதி என் கேள்வி கேட்டிருக்கிறார்கள் எனத் தெரிவித்த அவர், இதுதான் திராவிட மாடல் ஆட்சியா என்று கேட்கும் நிலைமைக்குப் பொதுமக்கள் வந்துள்ளார்கள் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 4 வருடம் வண்டி ஓடும் , நான்கு வருடம் முடிந்த பிறகு பொங்கல் தொகுப்பில் எத்தனை பேர் உள்ளே செல்கிறார்கள் என்று பாருங்கள் எனக் கூறினார். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை 15 நாட்களாகக் காணவில்லை எனத் தெரிவித்த அவர், தற்போது மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டதாகவும், அதனால் அவர் 15 நாட்களாகக் காணவில்லை எனத் தெரிவித்தார். மேலும், இந்தியாவின் சிறு குறு தொழில் நிறுவனங்களின் தலைநகராக பல்லடம், திருப்பூர், கோவையாக மாறி இருக்கிறது எனக் கூறினார்.