ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பரமேஸ்வர் ரெட்டி உத்தரவின் அடிப்படையில், திருப்பதி மாவட்டத்தில் இருக்கின்ற தமிழ்நாடு கர்நாடக எல்லைகளில் 24 மணி நேரமும் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் சந்திரகிரி தொகுதிக்குட்பட்ட எர்ரவாரி பாளையம் பகுதி வழியாக மிகப்பெரிய அளவில் செம்மரங்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலை எடுத்து காவல்துறையினர் அந்த பகுதிக்கு சென்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த சமயத்தில் அந்த வழியாக வந்த வாகனங்களில் சோதனையிட்ட போது அதில் இருந்தவர்கள் தப்பிச்செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அவர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சேஷாசலம் வனப்பகுதியில் இருந்து செம்மரங்களை வெட்டி கடத்தி வருவது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த 9 பேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் கடத்திச் சென்ற 2 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக்கட்டைகள், 4 கார்கள், ஒரு பைக் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர் ஆந்திர மாநில காவல்துறையினர்.