மகளிர் உரிமைத்தொகையை தொடர்ந்து தற்போது மற்றொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து அக்கறை செலுத்தி வருகிறது. காலை உணவுத்திட்டம், உதவித்தொகை உள்ளிட்ட திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் அனைத்துமே மாணவர்களின் வளர்ச்சிக்கு மிகுந்த உதவியாக இருந்து வருகிறது. மேலும், பெண்களுக்கு ரூ.1,000 உரிமைத்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான், ஆண்களுக்கும் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கூறுகையில், ”தமிழ்நாட்டில் கடந்தாண்டு முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000 தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்யவும் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள், “பெண்களுக்கு 1,000 ரூபாய் வழங்குவது போன்று ஆண்களுக்கும் வழங்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் பெரியகருப்பன், “திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பெண்களுக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகையினை தமிழக அரசு வழங்கி வருகிறது. அந்த உரிமைத் தொகை தங்களுக்கு இல்லையே என்ற ஆண்களின் ஏக்கத்தை தீர்த்து வைக்கும் சூழ்நிலை எதிர்காலத்தில் வரும்” என்றார்.