தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனத்தை நாங்கள் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
மதுரையில் கோடை வெயிலை முன்னிட்டு அதிமுக சார்பில், பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி சொன்னது தான் உண்மை. அமித்ஷா அவருடைய கருத்தை தான் பதிவு செய்திருக்கிறார். அதிமுகவை எப்படி வழிநடத்த வேண்டும் என்பது எடப்பாடி பழனிசாமிக்கு தெரியும்.
அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்ததற்கான காரணத்தை அவரிடம் தான் கேட்க வேண்டும். எடப்பாடி பழனிசாமியிடம், செங்கோட்டையன் சொல்லிவிட்டு டெல்லி சென்றாரா? இல்லையா? என்பது எனக்கு தெரியாது. கூட்டணிக்காக செங்கோட்டையனை பாஜக பயன்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அவர்கள் ஆயிரம் சொல்லுவார்கள். அவர்களுக்கு எதுவும் தெரியாது.
C – Voter கருத்துக் கணிப்பில் முதல்வராக வருவது தொடர்பாக மு.க.ஸ்டாலினை விட எடப்பாடி பழனிசாமிக்கு குறைவாகத்தான் போட்டுள்ளார்கள். இதுக்கு பெயர் தான் ஊடு சால். அதிகமாக போட்டால் யாரும் நம்ப மாட்டார்கள். கருத்துக் கணிப்புகளை மக்கள் தூள் தூளாக்கி விடுவார்கள். தமிழக வெற்றிக் கழகத்தின் விமர்சனத்தை நாங்கள் பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை” என்றார்.