மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் தேசிய மகளிர் ஆணையத்தின் முதல் தலைவருமான ஜெயந்தி பட்நாயக் உடல்நலக்குறைவால் காலமானார்.. அவருக்கு வயது 90.
ஒடிஷா முன்னாள் முதல்வர் ஜே.பி பட்நாயக்கின் மனைவியான ஜெயந்தி பட்நாயக் 4 முறை மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.. இவரது கணவரும், ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், அசாம் மாநிலத்தின் முன்னாள் ஆளுநருமான ஜே பி பட்நாயக் 2015ம் ஆண்டு காலமானார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். ஜே பி பட்நாயக்கை 1953 இல் திருமணம் செய்து கொண்ட ஜெயந்தி பட்நாயக், கட்டாக் மற்றும் பெர்ஹாம்பூர் ஆகிய 2 தொகுதிகளிலிருந்தும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பல நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.. அவரது மறைவுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஒடிசா ஆளுநர் கணேஷி லால் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்..
ஜெயந்தி பட்நாயக்கின் மறைவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.. மேலும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ஓபிசிசி தலைவர் சரத் பட்நாயக், முன்னாள் ஓபிசிசி தலைவர் நிரஞ்சன் பட்நாயக் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
ஜெயந்தி பட்நாயக் ஏப்ரல் 7, 1932 இல் கஞ்சம் மாவட்டத்தில் உள்ள அஸ்காவில் பிறந்தார்.. அவர் கட்டாக்கில் உள்ள ஷைலபாலா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் சமூகவியலில் பட்டப்படிப்பை முடித்தார். மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸில் (TISS) முதுகலைப் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.