கர்நாடகாவில், தட்சிண கன்னடா மாவட்டத்தின் பெல்லாரே பகுதியை சேர்ந்தவர் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணியை சேர்ந்த தொண்டர் பிரவீன் நெட்டார். இவரை பெல்லாரே பகுதியில் வைத்து மூன்று பேர் கொண்ட கும்பல் பைக் ஒன்றில் வந்து நேற்றிரவு படுகொலை செய்து விட்டு தப்பியோடினர். பிரவீன் இரவு கடையை மூடிவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
இதனை கண்டித்து கர்நாடகாவின் பல பகுதிகளில் பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், சில இடங்களில் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்கிய சம்பவங்களும் நடந்துள்ளன. இதனையடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.
இதில், பலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. புட்டூர், கபடா மற்றும் சுல்லியா தாலுகாக்களில் இன்று முழு அடைப்புக்கு பாரதிய ஜனதா கட்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், தட்சிண கன்னடா எம்.பி.யான நளீன் கட்டீல் என்பவர், காரில் வந்து கொண்டிருந்தபோது, காரை மறித்து பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில், அவரது காரை சூழ்ந்து கொண்டு, அதனை சாய்க்க முயன்றனர். காரை குலுக்கினர். இதனால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது.