அதிமுக ஆட்சிக்காலத்தின் போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி வேலை வாங்கித் தருவதற்காக பணம் வாங்கியதாக புகார் இருந்தது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இது குறித்து விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி தொடர்புடைய பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் சோதனை நடத்தி வந்தனர். அதிலும் குறிப்பாக சென்னையில் உள்ள செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகம் போன்ற பகுதிகளிலும் சோதனை நடந்தது.
இதனைத் தொடர்ந்து, நேற்று அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர் அவரை கைது செய்து நுங்கம்பாக்கம் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்ற போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. ஆகவே சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இத்தகைய நிலையில், தான் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கான ஆவணங்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் தாக்கல் செய்தனர் மருத்துவ சான்றிதழ்களையும் வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நீதிபதி நேரில் வந்து செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி நேற்று பிற்பகல் 3 மணி அளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்று செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்பதை உறுதி செய்தார். அதோடு வரும் 18ஆம் தேதி வரையில் அவரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவு பிறப்பித்தார் மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கும் அனுமதி வழங்கினார்.
ஆனால் மருத்துவமனையில் ரிமாண்ட் செய்தது தவறு என்று செந்தில் பாலாஜி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆகவே நீதிமன்றத்தில் ரிமாண்டை ரத்து செய்யவும், ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பேரில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஏற்கனவே நீதிமன்ற காவலில் வைத்து உத்தரவிடப்பட்டிருப்பதால் நீதிமன்ற காவலில் உத்தரவை நிராகரிக்க கூடிய மனு செல்லத்தக்கதல்ல என்று உத்தரவிட்டு நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.