பணப்பரிமாற்ற வழக்கில் 2 வருடங்களுக்கு மேல் தலைமறைவாக இருந்துவந்த அசோக் குமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின்கீழ் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்தனர். அவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை விட அசோக்குமாருக்குத்தான் அதிக பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. கடந்த ஜனவரி மாதம் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உடகபட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
அசோக்குமாருக்கு வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால் பல முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருந்து வந்தார். சுமார் 2 வருடங்களுக்குமேல் அவர்தலைமறைவாக இருந்து வருகிறார். இந்த வழக்கு விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணையின் போது முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அசோக்குமார் உள்ளிட்டோர் வரும் ஏப்.9-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் 2 வருடங்களுக்கு மே தலைமறைவாக இருந்துவந்த அசோக் குமார் முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். இன்னும் சில மணி நேரங்களில் நீதிமன்றத்தில் ஆஜராவார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வழக்கு மாநில அரசியலில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அசோக் குமார் நீதிமன்றத்தில் ஆஜராகும் நிலையில், வழக்கு விசாரணை மேலும் வேகமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: மத்திய அரசின் சுற்றுலா மேம்பாட்டு கழகத்தில் வேலை.. லட்சத்தில் சம்பளம்..!! எப்படி விண்ணப்பிப்பது?