கேரள மாநிலம் திருவனந்தபுரம் பட்டம் பகுதியில் முன்னாள் ராணுவ வீரரான 75 வயது முதியவர் வசித்து வருகிறார். இவர், கொல்லம் பரவூரிலுள்ள தனது வீட்டை வாடகைக்குவிட விளம்பரம் கொடுத்திருந்தார். அவரது எண்ணுக்கு கடந்த மே மாதம் 24ஆம் தேதி அழைத்த ஒரு பெண், வீடு வாடகைக்கு வேண்டும் எனக் கேட்டுள்ளார். பின்னர் முதியவரிடம் போனில் அடிக்கடி பேசிய அந்தப் பெண், அவருடன் நட்பு ஏற்படுத்தியிருக்கிறார். பின்னர் ஆசைவார்த்தை கூறி முதியவரை கொல்லம் பரவூரிலுள்ள அவரது வீட்டில் தனியாகச் சந்திக்க விரும்புவதாகக் கூறி அழைத்துள்ளார்.
ஆசையுடன் வீட்டுக்குச் சென்ற முதியவருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் அவரை அழைத்த அந்தப் பெண், டி.வி. சீரியல் நடிகையான நித்யா சசி. நடிகையை மகிழ்ச்சியுடன் தனது வீட்டுக்குள் அழைத்துச் சென்றிருக்கிறார் முதியவர். ஆசையுடன் நெருங்கி, முதியவரின் ஆடைகளை அவிழ்த்து நெருக்கமாக நின்று செல்ஃபியும் எடுத்துள்ளார் அந்த நடிகை. அந்தச் சமயத்தில் நடிகையின் நண்பரான பினு என்பவர் திடீரென அங்குவந்து நடிகையையும், நிர்வாணமாக நின்ற முதியவரையும் சேர்த்து போட்டோ எடுத்துள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த முதியவரின் முகம் சுருங்கிப்போனது. அந்த போட்டோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துவிடுவதாகவும், அப்படி செய்யாமல் இருக்க 25 லட்சம் ரூபாய் வேண்டும் எனவும் நடிகையும், அவரின் ஆண் நண்பரும் முதியவரை மிரட்டியுள்ளனர். போட்டோ வெளியானால் அவமானமாகிவிடும் எனக் கருதிய முதியவர், முதற்கட்டமாக 11 லட்சம் ரூபாய் கொடுத்திருக்கிறார். 11 லட்சம் ரூபாயை வாங்கிய நடிகையும், அவரின் நண்பரும் மேலும் 25 லட்சம் ரூபாய் வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
இதனால் கவலையடைந்த முதியவர், இது குறித்து கடந்த 18ஆம் தேதி போலீஸில் புகார் அளித்திருக்கிறார். பின்னர் போலீஸார் வழிகாட்டுதலின்படி `பணம் ரெடியாகிவிட்டது’ எனக் கூறி நடிகை நித்யா சசி, பினு ஆகியோரை பரவூருக்கு அழைத்திருக்கிறார் முதியவர். பணம் பெறும் ஆசையில் வந்த நடிகை நித்யா சசி, அவரின் ஆண் நண்பர் பினு ஆகியோரை மறைந்திருந்த போலீஸார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
நடிகை நித்யா சசி (32) பத்தனம்திட்டா மாவட்டம், மலையாலப்புழா பகுதியைச் சேர்ந்தவர். அவர் வழக்கறிஞராகவும் இருக்கிறார். நடிகையின் நண்பரான பினு கொல்லம் பரவூரைச் சேர்ந்தவர். பினு முதியவரின் உறவினர் எனவும் விசாரணையில் தெரியவந்தது. நடிகையும், பினுவும் சேர்ந்துதான் முதியவரை ஹனி ட்ராப் மூலம் வீழ்த்தியது தெரியவந்துள்ளது. 75 வயது முதியவரை ஹனி ட்ராப் மூலம் வீழ்த்தி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.