தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியைச் சேர்ந்தவர் பெருமாள் (62). இவரது மனைவி தனம் (55). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். பெருமாளும், தனமும் கூலி வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில், பெருமாள் தினமும் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இந்நிலையில், சம்பவத்தன்றும் தனது மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த பெருமாள், தனது லுங்கியால் மனைவியின் கழுத்தை நெரித்துள்ளார். பின்னர், அருகில் கிடந்த கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார்.
இதையடுத்து, பெருமாளும் அதே கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அதிர்ச்சி அடைந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மனைவி தனத்தின் உடலை மீட்டு பிரேத பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட பெருமாளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.