சவுக்கு சங்கரை சிறையில் அடித்திருக்கிறார்கள்.. வலது கையை உடைத்திருக்கிறார்கள் என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.
சமூக வலை தளங்களில் தமிழக அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வந்தார் யூடியூபர் சவுக்கு சங்கர். முதல்வர் ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன், அமைச்சர் உதயநிதி ஆகியோர் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனல் ஒன்றிக்கு சவுக்கு சங்கர் நேர்காணலில் காவல் துறை அதிகாரிகள் குறித்தும், பெண் காவலர்கள் குறித்தும் அவதூறான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை மாநகர சைபர் கிரைம் காவல் துறையினர் கடந்த 4-ம் தேதி அதிகாலையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை அங்கிருந்து கோவை சைபர் கிரைம் காவல் துறை அலுவலகத்திற்கு தேனியில் இருந்து காவல் துறையினர் அழைத்து சென்றனர்.
அவர் மீது ஐந்து பிரிவுகள் என் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். சவுக்கு சங்கருக்கு கோவையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர் கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். சனிக்கிழமை அன்று கையெழுத்து போட்டவர் இன்னைக்கு விரல் ரேகை வைத்தது ஏன்..? அவரை அடித்திருக்கிறார்கள்.. வலது கையை உடைத்திருக்கிறார்கள் என சவுக்கு சங்கர் தரப்பு வழக்கறிஞர் பரபரப்பு குற்றச்சாட்டு முன் வைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்; சனிக்கிழமை நீதிபதி முன்னிலையில் கைது குறிப்பாணையில் கையெழுத்திட்ட சவுக்கு சங்கர், நேற்று காலை தேனி காவல்துறையினர் கைது குறிப்பாணை கொடுக்கப்பட்ட நகலில் கைரேகை இட்டுள்ளார் சவுக்கு சங்கர். ஏன் அவர் கைரேகை இட்டுள்ளார்? கோவை சைபர் கிரைம் காவல்துறையினர் காவல் மனு மீதான இன்று விசாரணை வந்த நிலையில், சவுக்கு சங்கர் தன் மீதான தாக்குதல் தொடர்பாக நீதிபதியிடம் தெரிவிக்க வாய்ப்புள்ளதால் தான் இன்றைய விசாரணை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இந்த நிமிடம் வரை எக்ஸ்ரே எடுக்கவில்லை. சிறையில் நேரடியாக ஆய்வு செய்த சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அறிக்கை பெற்று, சவுக்கு சங்கருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க இன்று கேட்க உள்ளோம் என்றார்.