புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி ஊராட்சி மயிலாடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா மகன் துரைக்கண்ணு (36). அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர் என்பவரது மகள் பவித்ரா (21). பட்டதாரியான இவரை துரைக்கண்ணு காதலித்து வந்துள்ளார். இருவரும் அண்ணன் – தங்கை உறவு. இந்த உறவை மீறிய காதலை பெற்றோர்களும், மற்றவர்களும் கண்டிக்க, பவித்ரா ஒதுங்கத் தொடங்கியுள்ளார். ஆனால், துரைக்கண்ணுவால் பவித்ராவை மறக்க முடியவில்லை. அண்ணன் – தங்கை, சித்தப்பா – மகள் என்ற உறவுகளைச் சொல்லி பிரிக்க நினைக்கிறார்கள் அதனால் வீட்டை விட்டு வெளியேறலாம் என்று துரைக்கண்ணு சொன்னபோது பவித்ரா மறுத்துள்ளார்.
இந்நிலையில், பவித்ராவுக்கு உடல்நலமின்றி வீட்டில் இருந்ததால், தன்னை சந்திக்கவில்லை பேசவில்லை என்று மன வேதனையும் கோபமும் கொண்ட துரைக்கண்ணு, சம்பவத்தன்று பவித்ரா வீட்டில் அனைவரும் கூலி வேலைக்குச் சென்ற பிறகு தனியாக இருந்த அவரை தேடிப் போய் தாலி கட்ட அதற்கு பவித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த துரைக்கண்ணு பவித்ராவை அரிவாளால் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து வெளியேறி தனது வீட்டிற்குச் சென்று துரைக்கண்ணு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கூலி வேலைக்குச் சென்ற பவித்ரா குடும்பத்தினர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் கழுத்தறுபட்டு சடலமாக கிடந்துள்ளார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, டிஎஸ்பி தீபக் ரஜினி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பவித்ராவின் உடலை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், துரைக்கண்ணு உடலை அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். முறை தவறிய காதலால் இரு உயிர்கள் பறிபோன சம்பவத்தை நினைத்து கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.