100-day work program: மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் நாடு முழுதும் 1.55 கோடிக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய புரட்சிகரமான திட்டங்களில் ஒன்று, மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம். இத்திட்டம் உடல் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கும் கிராமப்புற மக்களுக்கு வேலை உறுதி அளிக்கும் திட்டம் ஆகும். இந்த திட்டம் மிகவும் முற்போக்கான உலத்தை திரும்பி பார்க்க வைத்த திட்டம் ஆகும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தை, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2005ஆம் ஆண்டு கொண்டு வந்தது.
இந்த திட்டம் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஊரக பகுதிகளில் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒரு நபருக்கு 100 நாட்களுக்கு வேலை வழங்குவதை இந்த திட்டம் உத்தரவாதம் அளிக்கிறது. கிராம பஞ்சாயத்துகள் தான் வேலை வழங்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. 18 வயது பூர்த்தியான திறன் சாரா உடல் உழைப்பு கோரும் வேலை செய்ய விரும்புவோர் 100 நாள் வேலை திட்டத்தில் இணைந்து பணியாற்ற முடியும். அதற்கு தேவை ஆதார் கார்டு மட்டுமே.. ஆதார் கார்டு மூலம் இணைந்து ஒவ்வொரு மாதமும் கணிசமான வருமானத்தை ஈட்டஅரசே வழிவகை செய்கிறது.
இதுதொடர்பாக மக்களவையில் பேசிய மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் கமலேஷ் பஸ்வான், போலியான தகவல், கிராம பஞ்சாயத்தில் இருந்து இடம் பெயர்தல் போன்ற காரணங்களால், 2022 – 23 நிதியாண்டில் 86.17 லட்சம் தொழிலாளர்களும், 2023 – 24 நிதியாண்டில் 68.86 லட்சம் தொழிலாளர்களும் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறியுள்ளார்.
வேலைவாய்ப்பு அட்டையை புதுப்பிப்பது மற்றும் நீக்குவது போன்ற பணிகளை மேற்கொண்டு வரும் மாநில அரசுகளிடம் சட்ட விதிகளை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தகுதியான தொழிலாளர் யாரும் விடுபடக் கூடாது என்ற நோக்கில், ஊரக வளர்ச்சித் துறை சார்பில் நிலையான செயல்திட்டம், அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மோசடிகளை தடுக்க அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்கப்படுகிறது என்று கூறினார்.