தமிழகத்தில் தொடரும் அவலமாக பரோட்டா சாப்பிட்ட 38 பேர் உடல்நலக்குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலத்தில், ஷவர்மா சாப்பிட்டு இளம்பெண் பலியான நிலையில், அடுத்தடுத்து தமிழகத்திலும் உணவகங்களில் கெட்டுப் போன இறைச்சி சாப்பிட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்தன. வேலூரில் சிக்கன் பிரியாணி, ஷவர்மா சாப்பிட்டு பலியானார்கள். ஆரணியில் சிக்கின் சாப்பிட்டு சிறுமி உயிரிழந்தால். பல இடங்களில் பிரியாணியில் எலி தலை, கரப்பான்பூச்சி, புழு என்று வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி வைரலாகின.
உணவுத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கெட்டுப் போன இறைச்சியைப் பறிமுதல் செய்தது, அபராதம் விதித்த கதையெல்லாம் நடந்தது. ஆனால், அந்த மாதத்தோடு இதெல்லாம் மறந்து போய் விட்டார்கள். மீண்டும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இப்படி பணத்திற்கு ஆசைப்பட்டு உணவகங்கள் மக்களின் உயிரோடு விளையாடுகின்றன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதைப்பற்றி எல்லாம் எந்தவிதமான அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை என்று பொதுமக்கள் புலம்புகின்றனர். வாரந்தோறும் இப்படி சோதனை நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டால், அவர்கள் திருந்த வாய்ப்பாக இருக்கும்.
இந்நிலையில், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வந்த சுமதி மெஸ்ஸில் விற்பனை செய்யப்பட்ட பரோட்டா, குருமாவைச் புதூர் காலனி, குறவர் காலனி பகுதியில் வசிப்பவர்கள் சாப்பிட்டுள்ளனர். இதனால் 38 பேருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவு பாதுகாப்பு தர சட்டத்தின்படி உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் சேந்தமங்கலம் கடைவீதி பகுதியில் இயங்கி வந்த சுமதி மெஸ் தனியார் உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட 18 பேருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு உரிய தகவல் வழங்கவில்லை. இதனால் பொது சுகாதாரம் தொற்று நோய் சட்டத்தின்படி அந்த மருத்துவருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், 30-க்கும் மேற்பட்டவர்கள் பரோட்டா சாப்பிட்டு சிகிச்சைக்கு வந்ததை மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு தெரிவிக்காததால் மருத்துவர்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை ஆட்சியர் நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.