அரும்பாக்கம் வங்கியில் பணிபுரியும் ஊழியரே நகைகளை திருடி சென்ற சம்பவத்தில், போலீசார் கைது செய்தவரிடம் நகைகள் இல்லாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பெட் கோல்டு வங்கியில் நேற்று கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பாக அரும்பாக்கம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், வங்கியில் பணியாற்றும் முருகன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வங்கியில் நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் மயக்கம் மருந்து கலந்த குளிர்பானத்தை வங்கியின் காவலாளிக்கு கொடுத்து மயக்கம் அடைய செய்ததும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. பின்னர், வங்கி மேலாளர் மற்றும் அங்கு பணியாற்றும் பெண் ஊழியர் ஆகியோருக்கும் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து ஏமாற்றியுள்ளனர். பின்னர் அவர்களை கட்டிபோட்டு விட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மயக்கம் தெளிந்த பிறகு வங்கி மேலாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், முருகன் அவரது நண்பர்களுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார். இதையடுத்து, 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், முருகனுடன் சேர்ந்து நகைகளை கொள்ளையடித்த பாலாஜி என்பவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவரிடம் நகைகள் இல்லை என்பது தெரியவந்தது. இதனால், விசாரணையில் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் பிடித்த பிறகே நகைகள் வைத்திருக்கும் இடம் குறித்து தெரியவரும் என போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.