கரூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவியை சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து கழுத்தறுத்து கொலை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் சமீபகாலமாகவே பெண்கள், மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பள்ளி – கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. சமீபத்தில் கூட கோவையில் 17 வயது சிறுமியை கல்லூரி மாணவர்கள் 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இந்நிலையில், தற்போது கரூரில் நடந்த ஒரு சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தரங்கப்பட்டி அருகே உள்ள பள்ளியில் மாணவி ஒருவர் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்த மாணவியை 12ஆம் வகுப்பு மாணவன் ஒருவன், தனியாக அழைத்துச் சென்று தனது நண்பர்களுடன் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளான். அப்போது, மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். இதனால், மாட்டிக் கொள்வோம் என்ற பயத்தில் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர், அங்கிருந்து அனைவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
பின்னர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தற்போது அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த 12ஆம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த சம்பவத்தில் யார் யார் ஈடுபட்டார்கள் என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 10ஆம் வகுப்பு மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து, கழுத்தை அறுத்துக் கொல்ல முயன்ற சம்பவம் மக்களை பீதியடைய வைத்துள்ளது.