NEET Topper: 2017 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வில் முதலிடம் பிடித்த பஞ்சாப்பை சேர்ந்த மருத்துவர் நவ்தீப் சிங் தற்கொலை செய்துகொண்டார்.
2017ம் ஆண்டுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET) நவ்தீப் சிங் 720 மதிப்பெண்களுக்கு 697 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பஞ்சாபின் முக்த்சரைச் சேர்ந்த நவ்நீத், சண்டிகரில் பயிற்சி பெற்றார். மௌலானா ஆசாத் மருத்துவக் கல்லூரியில் கதிரியக்கவியல் துறையில் MD படித்து வந்த நவ்தீப் சிங், ஞாயிற்றுக்கிழமை காலை, டெல்லி பார்சி அஞ்சுமானில் (பார்சி தர்மசாலா) அவரது அறையில் மின்விசிறியில் அவரது உடல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது.தற்கொலை செய்தி கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உள்ளனர். போலீசார் மாலையில் பிரேத பரிசோதனை செய்து உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். தற்போது தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.
காவல்துறையின் கூற்றுப்படி, நவ்தீப் சிங்கின் குடும்பத்தில் தந்தை கோபால் சிங், தாய் சிம்ரஞ்சித் கவுர் மற்றும் ஒரு இளைய சகோதரர் உள்ளனர். தந்தை பஞ்சாபில் ஒரு கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார், இளைய சகோதரர் சண்டிகரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார். எம்பிபிஎஸ் முடித்த நவ்தீப், கல்லூரிக்கு அருகில் உள்ள பார்சி தர்மசாலாவில் அறை எடுத்து தங்கியிருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை, நவ்தீப்பின் அறை உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதாக பார்சி தர்மசாலாவின் காவலர் கூறினார். நீண்ட நேரம் தட்டியதையடுத்து, மற்றவர்கள் உதவியுடன் கதவை உடைத்து பார்த்தபோது, அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் நவ்தீப் சடலமாக கிடந்தார். சம்பவம் நடந்த உடனேயே, போலீசாருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிங்கின் குடும்பத்தினருக்கும் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இதையடுத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.