சாதாரண மது வகைகளின் விலையை பாட்டிலுக்கு, 2 ரூபாய் வரை உயர்த்துவது குறித்து, தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக அரசின், ‘டாஸ்மாக்’ நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்பனை செய்கிறது. இந்நிறுவனம், ஏழு நிறுவனங்களிடம் பீர்; 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளை கொள்முதல் செய்கிறது. அதன்படி, சாதாரணம், நடுத்தரம், உயர்தரம் என, மூன்று வகைகளில் மது பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. மாதம் சராசரியாக, 50 லட்சம் பெட்டி மது வகைகள் விற்பனையாவதில், சாதாரண வகையின் பங்கு, 40 லட்சம் ஆகும்.
மது தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்களின் விலையை லிட்டருக்கு, 3.47 ரூபாயாக, அரசு சமீபத்தில் உயர்த்தியது. இது, ‘சாதாரண மது வகை தயாரிப்பு செலவை அதிகரித்துள்ளது; அதற்கேற்ப மது பாட்டிலுக்கு கூடுதல் விலை வேண்டும்’ என, மது தயாரிப்பு ஆலைகள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. எனவே, சாதாரண மது வகைகளின் விலையை பாட்டிலுக்கு, 2 ரூபாய் வரை உயர்த்துவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.