மகளின் தற்கொலைக்கு காரணமான காதலனை கொலை செய்து சமாதி அருகே தந்தை புதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் துவாரகா திருமலை மண்டலம், ஐ.எஸ்.ராகவபுரம் ஊராட்சி துர்ல லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் தனிகடப்பா பவன் கல்யாண் (24). இவரும் ராமசிங்கவரம் ஊராட்சி கொடுகுப்பேட்டையை சேர்ந்த மரிது ஷியாமளா (18) என்பவரும் கல்லூரியில் படித்தபோது காதலித்து வந்துள்ளனர். தங்களின் காதலை சில மாதங்களுக்கு முன், வீட்டில் இருவரும் கூறினர். ஆனால், இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் ஏற்கவில்லை. இதனால், மனமுடைந்த ஷியாமளா கடந்த ஜூன் 5ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலை செய்துக் கொண்டார். இந்நிலையில், கடந்த 15ஆம் தேதி பவன் கல்யாண் தனது நண்பர் நாகராஜூடன் ஜங்காரெட்டிகுடம் மண்டலம் நிம்மலகுடேமில் உள்ள கால்வாய் கரையில் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பவன் கல்யாணை ஷியாமளாவின் தந்தை நாகேஸ்வரராவ் இறுதியாக அழைத்துச் சென்றது தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் நடத்திய விசாரணையில், பவன் கல்யாணை கொலை செய்து, ஷியாமளா சமாதிக்கு அருகில் அவரது சடலத்தை புதைத்து சமாதி கட்டியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல்துறையினர், பவன் கல்யாண் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று சடலத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக ஜங்காரெட்டிகுடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.