cancer drugs price: புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்றுநோய்களை சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான மருந்துகளின் விலையை 1.7% அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மாற்றம், நீண்ட காலமாக இவை பயன்படுத்தி வருபவர்களை பாதிக்கலாம், ஆனால் மருந்து உற்பத்தி செலவு மற்றும் பொருளாதாரச் சவால்களை சமாளிக்க இந்த திருத்தம் அவசியம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஏன் மருந்து விலை மாற்றம்? தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) சில மருந்து நிறுவனங்கள் அரசு நிர்ணயித்த வரம்பை மீறி அதிக விலையில் விற்பனை செய்துள்ளன என்பதை கண்டறிந்துள்ளது. ஆய்வில், 307 வழக்குகளில் மருந்து நிறுவனங்கள் விலை நிர்ணய விதிகளை மீறியுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதைத் தடுக்கும் வகையில், அரசாங்கம் மருந்து விலைகளை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, மருந்து விலைகளை சமநிலைப்படுத்தும் நோக்கத்தில் 1.7% வரை சிறிய விலை உயர்வு அனுமதிக்கப்பட உள்ளது.
மருந்து நிறுவனங்கள் என்ன சொல்கின்றன?மருந்து விற்பனையாளர்கள் விலை உயர்வு அவசியம் என்று விளக்குகின்றனர், ஏனெனில், மருந்துகள் தயாரிக்க தேவையான மூலப்பொருட்களின் விலை உயரும் காரணமாக, மருந்து உற்பத்தி செலவுகளும் அதிகரித்துள்ளன. மருந்து உற்பத்தியில் முக்கியமான மூலப்பொருட்கள் (Raw Materials) தொடர்ந்து விலை உயர்ந்து கொண்டிருப்பது, மருந்து விலையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து உற்பத்தி மற்றும் செயல்பாட்டு செலவுகள் அதிகரித்துவரும் சூழ்நிலையில் இருக்கின்றன. மருந்து விற்பனையாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி ராஜீவ் சிங்கால் கூறுகையில், புதிய விலை மாற்றங்கள் மருந்துக் கடைகளில் செயல்பட இரண்டு முதல் மூன்று மாதங்கள் ஆகலாம் என்று கூறினார்.
நோயாளிகளுக்கு நல்ல செய்தி: அரசாங்கம் தெரிவித்துள்ளதாவது, மருந்து விலைகள் மீது மேற்கொண்ட கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மக்கள் பெரிய அளவில் பணம் சேமிக்க உதவியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் நோயாளிகள் ரூ.3,788 கோடி வரை சேமிக்கின்றனர். விலை கட்டுப்பாடு காரணமாக, புற்றுநோய், நீரிழிவு, இருதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்றுநோய்களுக்கு தேவையான முக்கிய மருந்துகள் மலிவாக கிடைக்கிறது.