இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையும் இறங்கியுள்ளது.
உலகளாவிய பொருளாதார மந்த நிலையின் தாக்கமானது பல்வேறு முன்னணி நிறுவனங்களையே ஆட்டம் கான வைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது பெரும்பாலான சர்வதேச நாடுகளை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களாகவே முன்னணி பெருநிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை குறைத்துக் கொண்டுள்ளன. அத்துடன் உலகின் முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாஃப்ட், ட்விட்டர், அமேசான் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் கணிசமான எண்ணிக்கையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. அதேபோல், வெற்றிகரமாக செயல்பட்ட பைஜூஸ் போன்ற ஸ்டார்அப் நிறுவனங்களும் வருவாய் குறைவு காரணமாக ஆயிரக்கணக்கான ஊழியர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது.

அந்த வரிசையில் தற்போது இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவும் இணைந்துள்ளது. இந்நிறுவனம் கடந்த இரு வாரங்களில் சுமார் 100 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கியுள்ளது. அத்துடன் நிறுவனத்தின் இழப்பை சரிகட்ட மொத்த ஊழியர்களில் 4 சதவீதம் பேரை வேலையில் இருந்து வெளியேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. ப்ராடக்ட், டெக், கேட்டலாக் மற்றும் மார்க்கெட்டிங் என அனைத்து பிரிவுகளில் இருந்து ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு மாத காலத்தில் நிறுவனத்தின் முன்னணி பொறுப்பாளர்களான சித்தார்த் ஜவஹர், ராகுல் கஞ்சோ, மோஹித் குப்தா ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இந்நிறுவனம் கடந்த காலாண்டில் ரூ.250.8 கோடி நிகர இழப்பை சந்தித்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தில் மொத்தம் 3,800 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். கொரோனா தொற்று காலத்திலும் இந்நிறுவனம் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.