வீட்டில் பிரசவம் பார்த்ததால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள நிமினி வயல் பகுதியில் வசிப்பவர் தேவன் – லட்சுமி தம்பதியினர். இவர்கள் அதே பகுதியில் கூலித் தெழிலாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு 21 வயதில் பிரியா என்ற மகள் உள்ளார். திருமணம் ஆகாத நிலையில், பிரியா 8 மாதம் கர்ப்பமாய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் மர்மமான முறையில் பிரியா இறந்துள்ளார். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் பிரியாவை கூடலூர் அரசு மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் விசாரணையின் போது முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் கூறியதை அடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடல் பிரேத பரிசோதனைக்காக உதகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

பின்னர், போலீசாரின் விசாரணையில் பிரசவ வலி காரணமாக பிரியாவின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் பிரியாவுக்கு குழந்தை பிறந்ததாகவும் குழந்தையை புதைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கூடலூர் தாசில்தார் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் போலீசார் நேற்று மாலை தேவன் வீட்டின் பின்புறம் புதைத்து வைக்கப்பட்டிருந்த குழந்தையின் உடலை மீட்டுச் சென்றனர். காதலனால் கர்ப்பமான பிரியாவுக்கு பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது சம்பவங்கள் நடந்ததா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பின்னரே தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.