தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. செம்மர கடத்தல் தொழிலாளர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தில், அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். பாக்ஸ் ஆபிஸில் சுமார் ரூ.350 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது. இந்த வெற்றியை தொடர்ந்து, புஷ்பா 2 படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், படக்குழுவினர் படப்பிடிப்புக்கு சென்றபோது, சாலை விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் நல்ல கொண்டாமாவட்டம் நர்கெட்பள்ளி என்ற இடத்தில் படக்குழுவினரின் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிரே வந்த மற்றொரு பேருந்தின் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ‘புஷ்பா 2’ படக்குழுவினர் சிலர், பலத்த காயமடைந்த நிலையில், ஒரு சிலர் சிறு சிறு காயங்களுடன் உயிர்தப்பினர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த புஷ்பா 2 படத்தின் படக்குழுவினர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அல்லு அர்ஜுன், புஷ்பா பட ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.