உத்திரப்பிரதேச மாநிலம் கோண்டாவை சேர்ந்த பல்வந்த்சிங்(35) என்பவர் பீஹார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தின் குல்காரியாவில் இருக்கின்ற சுங்கு சாவடியில் பணிபுரிந்து வந்தார். சுங்க கட்டணத்தில் பல்வன்சிங் 50 ரூபாய் திருடியதாக புகார் இருந்தது ஆகவே அந்த இளைஞரை சக பணியாளர்களும், பவுன்சர்களும் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர்.
இதில் படுகாயம் அடைந்த அவர் சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ரூ.50 தேடியதாக தெரிவித்து 35 வயது இளைஞர் அடித்து கொலை செய்யப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
பலவந்த் சிங் தாக்கப்படும் வீடியோ பதிவுகள் இணையதளத்தில் வைரலாகி வருகின்ற சூழ்நிலையில், விவகாரம் காவல்துறையினரின் கவனத்திற்கு சென்றது இதை அடுத்து சுங்கச்சாவடி அமைந்திருக்கின்ற பகுதிகளுக்கு சென்ற காவல்துறையினர் விசாரணை நடத்தினர். உயிரிழந்த பல்வந்த் சிங் 6 முதல் 7 மாதங்களாக அந்த பகுதியில் பணிபுரிந்து வந்திருக்கிறார். அவர் மீது சக ஊழியர்கள் திருட்டு புகார் வழங்கியதை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பவுன்சர்கள் மற்றும் சில ஊழியர்கள் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அதோடு அந்த பகுதியில் உயிரிழந்தவரின் பிரேத பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்ட பவுன்சர்களில் 4 பேர் ஹரியானாவை சேர்ந்தவர்கள் என்றும் இருவர் உத்தரபிரதேசத்தை சார்ந்தவர்கள் என்றும் முதல் கட்ட தகவல் கிடைத்திருக்கின்றன.