செல்போன் எண்ணுக்கு கட்டணம் வசூலிக்கவும் பயன்படுத்தப்படாத எண்ணை துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது.
ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஃபோன் என்றால் பேசுவதற்கு என்ற விதியெல்லாம் எப்பொழுதோ மாறிவிட்டது. வங்கி பரிவர்த்தனைகள், சமூக வலைதளங்கள், கேமிங், இணையதள பயன்பாடுகள் என செல்போனின் பயன்பாடுகள் ஏராளம். பயனாளர்களை கவனத்தில் கொண்டு பட்ஜெட் போன்களை சந்தையில் இறக்கி அனைவரது கையிலும் போன்களை தவழவிடுகின்றன செல்போன் நிறுவனங்கள்.
நம் உடலுறுப்பாகவே மாறி வரும் ஸ்மார்ட்போனால் உடல்ரீதியான, மன ரீதியான பிரச்சனைகளும் நம்மை ஆட்கொள்ளத் தொடங்கிவிட்டன. பல இளைஞர்கள் இரவில் சரியான நேரத்தில் தூங்காமல் செல்போனை பயன்படுத்திக் கொண்டு விழித்திருப்பது, காலையில் தாமதமாக எழுவது என அபாயகரமான வாழ்வை நோக்கி இழுத்துச் செல்கிறது செல்போன். இதற்கிடையே, பயனர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்திய தொலைத்தொடர்பு ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதே சமயம் சில வெளிநாடுகளில் செல்போன் மற்றும் தரைவழி தொலைபேசி எண்ணுக்கு தனி கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்தியாவில் பேன்சி எண்ணுக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில், செல்போன் எண்ணுக்கு கட்டணம் வசூலிக்கவும் பயன்படுத்தப்படாத எண்ணை துண்டிக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கவும் அரசுக்கு டிராய் பரிந்துரைத்துள்ளது. இது அமலானால் மக்கள் தங்கள் பயன்படுத்தும் எண்ணுக்கு கட்டணம் செலுத்தும் நிலை ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.