நாடு முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மானிய விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ரேஷன் கோதுமையை சாப்பிட்ட கிராம மக்களுக்கு வினோத நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானா மாவட்டத்தில் சுமார் 18 கிராமங்களில் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முடி உதிர்வு ஏற்பட்டது. இதனால், புதியவகை நோய் தொற்று பரவியதாக அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். இதையடுத்து, அப்பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர், ஒரு மாதமாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பொதுமக்கள் சாப்பிடும் கோதுமையில் உள்ள நச்சுப் பொருட்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக மருத்துவர் ஹிம்மத்ராவ் பவாஸ்கர் அளித்துள்ள பேட்டியில், ”ரேஷன் கடைகளில் வழங்கப்படும் கோதுமை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கோதுமைகள் அனைத்தும் பஞ்சாப்பில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதில், 600 மடங்கு அதிக செலினியம் இருப்பது ஆய்வில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட 18 கிராமங்களில் உள்ள மாணவர்கள் மற்றும் இளம்பெண்களுக்கு கடுமையான முடி உதிர்வு ஏற்பட்டுள்ளது.
அறிகுறிகள் தோன்றிய 3, 4 தினங்களுக்குள் மொத்த முடியும் உதிர்ந்து வழுக்கை ஏற்பட்டுவிடும்” என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்நோயால், பாதிக்கப்பட்டவர்களின் ரத்தத்தில் அதிக செலினியம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மத்திய அரசிடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.