200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகள் ஹேக்கர்களால் திருடப்பட்டு, பின்னர் அவற்றை இணைய ஹேக்கிங் மன்றத்தில் பதிவிட்டதாக பாதுகாப்பு ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
200 மில்லியனுக்கும் அதிகமான ட்விட்டர் பயனர்களின் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் தரவு மீறல், நன்கு அறியப்பட்ட ஹேக்கர் தளத்தில் தோராயமாக 2 டாலருக்கு பட்டியலிடப்பட்டது. மீறலில் சேர்க்கப்பட்டுள்ள பல மின்னஞ்சல் முகவரிகளின் உண்மைத்தன்மை BleepingComputer ஆல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய இணைய பாதுகாப்பு-கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கால், லிங்க்ட்இனில், இந்த தகவல் திருட்டு துரதிர்ஷ்டவசமாக, ஹேக்கிங் உள்ளிட்ட பல்வேறு இணைய மோசடிகளுக்கு வழிவகுக்கும் என்று கூறினார். இதுகுறித்து, டிசம்பர் 24 அன்று சமூக ஊடகங்களில் செய்தியைப் பகிர்ந்ததிலிருந்து, ட்விட்டரோ அதன் பிரதிநிதிகளோ சம்பவம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை. சிக்கலை சரிசெய்ய ட்விட்டர் என்ன நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று அலோன் கால் கூறினார்.
ஹேக்கர்கள் ஜூலை 22, 2022 முதல் ஸ்கிராப் செய்யப்பட்ட ட்விட்டர் பயனர்களின் தனிப்பட்ட(தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் போன்றவை) அல்லது பொதுவான விவரங்களை விற்றுள்ளனர். மேலும் ஹேக்கர்கள் யார் அல்லது எங்கே என்பது பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. டிசம்பரில் 400 மில்லியன் மின்னஞ்சல் முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள் திருடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.