கிரிக்கெட் போட்டியின் போது வீரர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்தவரின் பெயர் விகாஸ் நேகி. 34 வயதான இவர், டெல்லியில் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். நொய்டாவின் செக்டார் 135ல் கட்டப்பட்ட புதிய மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்தப் போட்டி மேவரிக்-11 மற்றும் பிளேசிங் புல்ஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.
மேவரிக்-11 இன் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அந்த அணியின் பேட்ஸ்மேன்களான உமேஷ் குமாரும் விகாஸ் நேகியும் களத்தில் இருந்தனர். 14-வது ஓவரின் 5-வது பந்தில் உமேஷ் ஷாட் அடிக்க மறுமுனையில் நின்ற விகாஸ் ரன் எடுக்க ஓடினார். பந்து எல்லையை தொட்டு பவுண்டரியாக மாற, உமேஷுடன் கைகுலுக்கி விட்டு விகாஸ் மறுமுனையில் உள்ள ஸ்ட்ரைக்கு திரும்பத் தொடங்கினார். அப்போது திடீரென யாரும் எதிர்பார்க்காத நேரத்திலேயே ஆடுகளத்தில் மயங்கி விழுந்தார்.
சில நிமிடங்களில் அனைத்து வீரர்களும் விகாஸைச் சுற்றி திரண்டு முதலுதவி செய்ய தொடங்கினர். விகாஸ் மைதானத்தின் நடுவே விழுந்ததை தொடர்ந்து, அவருக்கு உடனடியாக CPR கொடுக்கப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த முழு சம்பவத்தின் வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.