ஜம்மு – காஷ்மீர் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வருகிறது. எல்லை கோடு பகுதியில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்றிரவும் குப்வாரா மற்றும் பாரமுல்லா பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது.
இந்த சூழலில் தான், ஐம்மு – காஷ்மீரின் பஹல்காமில் இருந்து அதிர்ச்சிகரமான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பைசரன் பள்ளத்தாக்கில் ஜிப்லைன் மூலம் ஒருவர், இயற்கையின் அழகை ரசித்த படி வீடியோ எடுத்துக் கொண்டே செல்கிறார். அந்த வீடியோவில் அவர் மிகவும் சிரித்த முகத்துடன் செல்கிறார். அப்போது, கீழே தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இதுபற்றி அவருக்கு எதுவும் தெரியாமல் ஜாலியாக பயணித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த வீடியோவில் இருப்பவர் ரிஷி பட்டா என்பது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா டுடே செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அவர், “என் ஜிப்லைன் பயணத்தின் இறுதியில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை உணர்ந்தேன். பின்னர், உடனே ஜிப்லைனை நிறுத்தி சுமார் 15 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தேன். பின்னர், என் மனைவியையும், மகளையும் அழைத்துக் கொண்டு ஓடத் துவங்கினேன். அப்போது ஜிப்லைன் ஆபரேட்டர் அல்லாஹு அக்பர் என்றார். அப்போது அதை கேட்க உணர்வுப்பூர்வமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், எக்ஸ் தளத்தில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பயனர் ஒருவர், பயங்கரவாத தாக்குதல்களுக்கு இடையில் வேண்டுமென்றே சுற்றுலாப் பயணியை ஜிப்லைனில் அனுப்புவது போல் இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும், அவரை விசாரணைக்காக பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.