தமிழ்நாடு நிதியமைச்சர் கார் மீது செருப்பு வீசிய சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அண்ணாமலை பதவி விலக வேண்டும் என திருநாவுக்கரசர் எம்.பி. தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளை நினைவு கூறும் வகையில் திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், “இந்த பாத யாத்திரை சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவு கூறுவதோடு மட்டுமல்லாமல் தற்போது பாஜக ஆட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் நடத்தப்படுகிறது. தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இது காட்டுமிராண்டித்தனமான செயல்.

அமைச்சர் என்றில்லை தனி மனிதன் மீதும் இது போன்ற தாக்குதல் நடத்தக் கூடாது. கருத்தைக் கருத்தால் தான் எதிர் கொள்ள வேண்டும். இந்த சம்பவத்திற்குப் பொறுப்பேற்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதவி விலக வேண்டும். நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியல் பேசலாம். ஆனால், ஆளுநருக்கென்று சில வரைமுறைகள் உள்ளது. அதை அவர் பின்பற்ற வேண்டும். ரஜினி அரசியல் பேசியதில் தவறில்லை, ஆளுநர் அரசியல் பேசக் கூடாது”. இவ்வாறு அவர் கூறினார்.