வயல்களில் உரமாக பயன்படுத்தப்படும் சித்தகத்திப்பூவில் அடங்கியுள்ள மருத்துவ பயன்கள், மனிதர்கள் ஆரோக்கியத்திற்கு எந்தெந்த வகையில் உதவுகிறது என்பதை இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்ளலாம்.
முன்னோர்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்ததற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக மூலிகை செடிகள் விளங்கிவந்தன. அந்தகாலத்தில் உடலுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் மூலிகை செடிகளை பயன்படுத்தி நோய்களை குணப்படுக்கொண்டனர். ஆனால் தற்போது, உடலுக்கு சிறிய பிரச்சனை என்றாலும் மருத்துவர்கள் மற்றும் மருந்து மாத்திரைகளையே தேடி செல்கின்றோம். அந்தவகையில் சித்தகத்திப் பூவில் உள்ள மருத்துவ பயன்கள் குறித்து இதில் தெரிந்துகொள்வோம். மஞ்சள் நிற மலர்களையும் நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் கொண்ட மென்மையான சிறுமரம் தான் சித்தகத்தி.
விரைவாக வளரக்கூடிய இந்த மரத்தின் பூக்கள் வயல்களுக்கு உரமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் இந்த பூக்களை சிற்றகத்தி மற்றும் கருஞ்செம்பை என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இந்த சித்தகத்தி பூக்களை நல்லெண்ணெயுடன் காய்ச்சி பின் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் வைத்துக்கொள்ளவும். பின் இந்த எண்ணெயை வாரத்திற்கு ஒருமுறை தலையில் தேய்த்து குளித்து வந்தால், தலைவலி, கழுத்து நரம்பு வலி, மூக்கில் நீர்வடிதல், சீதளம், தலைபாரம், ஆஸ்துமா மற்றும் தலையில் நீர்க்கோர்த்தல் போன்ற பிரச்சனைகள் குணமடைய உதவுகிறது.
மேலும், இந்த சித்தகத்தி பூவுடன் அதன் இலைகளையும் அரைத்து கட்டிகள் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் சரியாகும். தோலில் தடவி வந்தால், தோலில் ஏற்படும் படை, சொறி, அரிப்பு போன்ற நோய்கள் குணமடையும். அதுமட்டுமல்லாமல், இது கீல்வாத வலி, காயங்கள், வீக்கம், நீரிழிவு நோய்க்கும் மருந்தாக பயன்படுகிறது.