எஸ். சசிகாந்த் இயக்கத்தில் நடிகர் ஆர். மாதவன், நயன்தாரா, சித்தார்த் மற்றும் மீரா ஜாஸ்மின் போன்ற நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள டெஸ்ட் திரைப்படத்தை நெட்ஃபிளிக்ஸ் நேரடியாக வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் விளையாட்டின் மீதுள்ள மோகம், அதிகார மட்டத்தில் நடக்கும் காய் நகர்த்தல்களை ஒரு சுவாரஸ்யமான கோணத்தில் சொல்லியிருக்கிறது இந்த படம்.
இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.வி சேகர் இப்படத்தை பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார். அந்த பதிவு தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், ‘என்னை ஒரு படத்திலிருந்து நீக்கினாலோ, அல்லது நானாக அந்த படத்தில் இருந்து வெளியேறினாலோ அந்த படம் ரிலீசாகாது. அப்படியே அந்த படம் ரிலீசானாலும் ஓடாது, இது வரலாறு, வரலாறு தொடர்கிறது என பதிவிட்டிருந்தார்” எஸ்.வி.சேகர். மேலும் டெஸ்ட் திரைப்படத்தின் புகைப்படத்தை அந்த பதிவில் போட்டு ஓபனாகவே எந்த படம் என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.
ஆனால் முன்பே இப்படத்தில் அவர் கமிட் ஆகி பின்பு நீக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். அதற்கான காரணத்தையும் சொல்லி இருக்கிறார். அதாவது இப்படத்தில் அவர் சித்தார்த்தின் தந்தையாக நடிக்க கதை கேட்டு சம்மதித்திருக்கிறார். அதற்காக அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சூட்டிங் ஆரம்பிப்பதற்கு 3 நாள் முன்னர் சசிகாந்த் எஸ்.வி.சேகரை நேரில் சந்தித்து உங்களை படத்தில் இருந்து நீக்கியதாக தெரிவித்துள்ளார். என்ன காரணம் என்றால் சித்தார்த் ஒரு மோடி எதிர்ப்பாளர், நீங்கள் ஒரு மோடி ஆதரவாளர், அவர் உங்களோடு நடித்தால், அவரை சோசியல் மீடியாவில் ட்ரோல் செய்துவிடுவார்கள். அதனால் சித்தார்த் உங்களுடன் நடிக்க பயப்படுகிறார் என்றாராம். அந்த கடுப்பில் தான் எஸ் வி சேகர் தற்போது இப்படி ஒரு பதிவை போட்டிருக்கிறார்.