அமெரிக்காவின் செஸ்டர்வில்லே நகரில் ஆறு வயது சிறுமியை பிட்புல் நாய் கடித்ததால் அந்த சிறுமிக்கு முகத்தில் ஆயிரம் தையல்கள் போடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவின் செஸ்டர்வில்லே நகரைச் சார்ந்த டோரதி நார்டன் என்பவரின் மகள் லில்லி என்ற ஆறு வயது சிறுமி. தனது அண்டை வீட்டில் சென்று விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த வீட்டிலிருந்த பிட்புல் நாய் சிறுமியை கொடூரமாக தாக்கி கடித்து இருக்கிறது. இதில் சிறுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மீட்கப்பட்ட சிறுமியை ஃபார்மிங்டன் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அதன் பிறகு சிறுமி மேல் சிகிச்சைக்காக பாஸ்டன் மெடிக்கல் சென்டருக்கு அவரது பெற்றோர்களுடன் ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சையின் போது சிறுமிக்கு முகத்தில் ஆயிரம் தையல்கள் போடப்பட்டுள்ளன. தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாக அவரது தாயார் தெரிவித்திருக்கிறார். சுயநினைவில் இருக்கும் சிறுமியை பேச முடியாவிட்டாலும் நாம் செய்யும் செயல்களுக்கு சைகையின் மூலம் பதில் அளிப்பதாக தெரிவித்திருக்கிறார் அவரது தாய். மேலும் கோ ஃபண்ட் மி என்ற அமைப்பின் மூலம் சிறுமியின் சிகிச்சைக்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அதனைப் பற்றி கருத்து தெரிவிக்க முடியாது என அந்த நகரத்தின் விலங்குகள் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. நிச்சயமாக அந்த நாய் கொல்லப்பட வேண்டும் என லில்லியின் தாய் யார் தெரிவித்திருக்கிறார்.