உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களுக்குமானியத்துடன் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தொழில்வளம் பெருகுவதற்கான இணக்கச் சூழலை மேம்படுத்துவதிலும் அதன் மூலம் கட்டமைப்பான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும் உறுதி கொண்டுள்ள தமிழ்நாடு அரசு சுயதொழில் புரிவதில் ஆர்வம் கொண்டோர் உதவி பெறத்தக்க மானியத்துடன் கூடிய கடனுதவித் திட்டங்களை முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் ஒன்று, மத்திய அரசின் 60% நிதிப்பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் “பிரதமரின் உணவுப் பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்கள் ஒழுங்குபடுத்தும் திட்டம் ஆகும்.

இத்திட்டத்தின் கீழ் உணவுப் பதப்படுத்தல் வகைப்பாட்டின் கீழ் அடங்கும் பழச்சாறு, காய்கறிகள், பழங்கள், மீன் மற்றும் இறால் கொண்டு செய்யப்படும் ஊறுகாய், வற்றல் தயாரித்தல், அரிசி ஆலை, உலர் மாவு மற்றும் இட்லி, தோசைக்கான ஈரமாவு தயாரித்தல், அப்பளம் தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச் செக்கு எண்ணெய், கடலை மிட்டாய், முறுக்கு, பேக்கரி பொருட்கள், இனிப்பு மற்றும் கார வகைத் தின்பண்டங்கள் தயாரித்தல், சாம்பார் பொடி, இட்லி பொடி, ரசப்பொடி உள்ளிட்ட மசாலா பொருட்கள் தயாரித்தல், காப்பிக் கொட்டை அரைத்தல், அரிசி மற்றும் சோளப் பொரி வகைகள், வறுகடலை, சத்து மாவு, பால் பதப்படுத்துதல், தயிர், நெய், பனீர் உள்ளிட்ட பால் பொருட்கள் தயாரித்தல், பல்லின இறைச்சி வகைகள் பதப்படுத்தல், உண்ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களைத் தொடங்கவும் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில்நுட்ப மேம்படுத்தல் செய்யவும் பயன் பெறலாம்.
தொழில் தொடங்கவும் மேம்படுத்தவுமான தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு, திட்ட அறிக்கை தயாரிக்கவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. நிதி நிறுவனங்கள் மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவிக்கு ஏற்பாடு செய்யப்படுவதுடன் தொழில் நடத்திடத் தேவையான சட்ட பூர்வ உரிமங்கள் மற்றும் தரச் சான்றிதழ்கள் பெறவும் சந்தைப்படுத்தலை மேம்படுத்தத் தேவையான உதவிகளும் வழங்கப்படுகின்றன.
