ஈரோடு அருகே கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியதால், பரிகாரம் செய்யப் பாம்பிடம் நாக்கை கொடுத்த அரசு அதிகாரியின் நாக்கு பறிபோன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த 54 வயதான அரசு அதிகாரி ஒருவரின் கனவில் அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. அரசுப்பணி போக மீதமுள்ள நேரத்தில் இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில், கனவில் அடிக்கடி பாம்பு தோன்றுவது குறித்து தனது மனைவியிடம் கூறியுள்ளார். இதனால், இருவரும் அப்பகுதியில் உள்ள ஜோசியரை அணுகி இதுகுறித்து கேட்டுள்ளனர். அப்போது, பாம்பு கனவில் வருதற்கு பரிகாரம் செய்தால் எல்லாம் சரியாகிவிடும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலில் சாமியாரிடம் பரிகார பூஜை செய்யுமாறு அந்த ஜோசியர் ஆலோசனை வழங்கி உள்ளார். அதன்பேரில் அந்த பூசாரியை அணுகியபோது, கொடிய விஷமுடைய கண்ணாடி விரியன் பாம்பை வைத்து நாகசாந்தி பூஜை செய்ய வேண்டும் என கூறி அந்த பூஜையை செய்துள்ளார்.

அப்போது, பூஜையின் இறுதியில் பாம்பின் முன் அரசு அதிகாரியின் நாக்கை நீட்டி பரிகாரம் செய்யுமாறு பூசாரி கூறியுள்ளார். இதனை நம்பி அதிகாரியும் பாம்பின் முன் சென்று தனது நாக்கை நீட்டியுள்ளார். இரண்டு முறை நாக்கை நீட்டிய போது அமைதியாக இருந்த பாம்பு மூன்றாவது முறை அவர் நாக்கை நீட்டிய போது திடீரென அவரது நாக்கை பதம் பார்த்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி, விஷம் ஏறாமல் இருக்க வேண்டும் என நினைத்து கத்தியை எடுத்து அதிகாரியின் நாக்கை அறுத்துள்ளார். இதில், நாக்கு துண்டாக அதில் இருந்து அதிகளவு ரத்தம் வெளியேறி அரசு அதிகாரி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து சிகிச்சைக்காக அவரை ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு மருத்துவர் செந்தில் குமரன் அடங்கிய குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். கடுமையான போராட்டங்களுக்கு பிறகு அந்த அரசு அதிகாரி தற்போது உயிர் பிழைத்துள்ளார். பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமே தவிர மூடநம்பிக்கைகளையும் வீட்டு வைத்தியத்தையும் செய்யக்கூடாது என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.