மதிய உணவுக்கான பருப்பு நிரப்பப்பட்டிருந்த கொள்கலனில் பாம்பு ஒன்றைக் கண்டதாகப் பள்ளி ஊழியர் ஒருவர் தெரிவித்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, `பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவில் சிக்கன், பழங்கள் வழங்கப்படும்’ என ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு அறிவித்திருந்தது. சோதனை அடிப்படையில் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தத் திட்டம் 4 மாதங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம் பிர்பூம் மாவட்டத்தின் மயூரேஷ்வர் தொகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியைச் சேர்ந்த சுமார் 30 மாணவர்கள் மதிய உணவை உட்கொண்டதால் நோய்வாய்ப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, பள்ளியில் உணவு தயாரித்த ஊழியர் ஒருவர் பருப்பு நிரப்பப்பட்ட கொள்கலனில் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறினர். தொடர்ந்து ஊழியர் கூறுகையில், “உணவு சாப்பிட்டதும் குழந்தைகளுக்கு வாந்தி எடுக்க ஆரம்பித்தனர். இதனால் பாதிப்படைந்த மாணவர்கள் கராம்பூர்ஹாட் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்” எனத் தெரிவித்தார். தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் ஒரு குழந்தை தவிர மற்ற குழந்தைகள் அனைவரும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று ஆய்வு அதிகாரி கூறியுள்ளார்.