திருச்சி மணப்பாறை பகுதியில் குதிரை பால் ஒரு லிட்டர் ரூ.2500க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நிறைய மருத்துவ குணம் கொண்டுள்ளதால் குதிரை பாலை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்
மாட்டுப்பால், ஆட்டுப்பால், ஒட்டகப்பால், கழுதைப்பாலை தொடர்ந்து தற்போது குதிரைப் பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது. இந்த குதிரை பால் மிக மிக அரிதாகதான் கிடைக்கும். இந்தநிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன். பட்டதாரியான இவர் தனியார் வங்கிப் பணியில் பணியாற்றி வந்தார். இதையடுத்து அந்த பணியை ராஜினாமா செய்து விட்டு குதிரைகளை வாங்கியும் விற்றும் வந்தார். இதன் தொடர்ச்சியாக குதிரை சவாரி செய்வதற்கான பயிற்சியை மணப்பாறையில் தொடங்கி நடத்தி வருகிறார்.
இந்நிலையில்தான் குதிரைப் பாலில் சத்துக்கள் அதிகம் என்பதை உணர்ந்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தேசிய குதிரைகள் தினமான கடந்த 13 ம் தேதி முதல் குதிரை பால் விற்பனையை தொடங்கினார். பல்வேறு மருத்துவ குணங்கள் கொண்ட இந்த குதிரைப் பாலை பொறுத்தவரை ஒரு லிட்டர் சுமார் ₹2500 வரை விற்பனை செய்து வருகிறார். குதிரைக்கு நல்ல உணவு பொருட்களை கொடுத்ததால் மட்டுமே ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பாலை கறக்க முடியும்.
இதனால் இந்த பால் தேவைப்படுவோர் முன்கூட்டியே புக்கிங் செய்து பாலை வாங்கிச் செல்கின்றனர். இதனால் பாலைப் பொறுத்தவரை ஒரு நபருக்கு சுமார் 100 முதல் 200 மில்லி வரை வழங்குகிறார். முதல் முறையாக குதிரைப் பால் எப்படி இருக்குமோ என்ற எண்ணத்தில் வாங்கிச் சென்ற மக்கள் தற்போது தினமும் வாங்கிச் செல்ல தொடங்கி உள்ளனர். பாலில் வெள்ளம், பனங்கற்கண்டு, நாட்டுச்சர்க்கரை இப்படி சேர்த்து காய்ச்சி சாப்பிட்டால் அந்த பாலின் சுவை பல மணி நேரம் நாவில் அப்படியே இருக்கும் என்பது ஒரு புறம் இருந்தாலும், உடலின் ஆரோக்கியத்தை மேன்மை பெறச் செய்யும் என்று சொல்கின்றனர்.