2024-2025ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல பெரிய திட்டங்கள் மற்றும் புதிய வசதிகளை மேம்படுத்துவது குறித்த அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக, மின்சார பயன்பாட்டில் நாட்டை தன்னிறைவு அடையச் செய்ய வீடுகளின் மேற்கூரையில் சோலார் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததை சுட்டிக்காட்டினார்.
மானிய விலையில் சோலார் மின் உற்பத்தி தொகுப்பை வழங்கும் இந்த திட்டம் இந்த ஆண்டு ஒரு கோடி வீடுகளில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார். இதன் மூலம் ஒரு வீட்டுக்கு மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக கிடைக்கும் என குறிப்பிட்டார். வீட்டின் சோலார் மின்சார பயன்பாட்டின் மூலம் சேமிக்கும் பணம் மற்றும் எஞ்சிய மின்சாரத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் என இந்த திட்டத்தில் பயனடைந்த ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரை செலவு மீதமாகும் எனவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
அதன்படி, வீடுகளில் சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு நேரடியாக களம் இறங்கியிருக்கிறது. இதற்காக, “பிரதமரின் சூரிய வீடு” என்ற பெயரில் ரூ.75,000 கோடி முதலீட்டில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்களுக்கு ரூ.30 ஆயிரமும், கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்த கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78 ஆயிரமும் மானியம் வழங்கப்படுகிறது. அதேபோல், 3 கிலோவாட் திறனுக்கு மேல் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்படுகிறது.
தமிழ்நாட்டிலும் வீடு, நிறுவனங்கள் ஆகியவற்றில் சோலார் அமைக்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், பலருக்கு எப்படி இதை அணுகுவது, நிறுவனங்கள் குறித்த எந்த விவரங்களும் கிடைப்பதில்லை. இதற்கு தீர்வு காணும் வகையில், மின்வாரியத்தின் இணையதளத்தில் சோலார் நிறுவனங்கள் பதிவு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி..?
இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் சோலார் பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். அதில் மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண், செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும். உங்கள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்தப்படும்.
இந்நிலையில், மத்திய அரசு திட்டத்தில் மின் நிலையம் அமைக்க தமிழ்நாட்டில் இருந்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை, 23 ஆயிரம் வீடுகளில் 1 கிலோவாட், 2 கிலோவாட் என ஒட்டுமொத்தமாக 120 மெகாவாட் திறனில் மேற்கூரை சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.