அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் மருமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அமைச்சரவையில் கடந்த 2016 ஆண்டு அமைச்சராக இருந்தவர் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்கரன். இவருக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், பாஸ்கரன் தனது மகள் சுமதியை சிவகங்கையைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்திருந்தார். பொறியியல் பட்டதாரியான சரவணன், கட்டுமான ஒப்பந்ததாரர் வேலை பார்த்து வந்ததோடு கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மதுரை ஒத்தப்பட்டி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது மனைவி சுமதி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இதையடுத்து, நேற்றிரவு தனியாக படுக்கச் சென்ற சரவணன் காலை வெகு நேரமாகியும் அறையின் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி சுமதி அதிர்ச்சியடைந்தார். அதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியோடு படுக்கை அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சரவணன் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து கருப்பாயூரணி காவல்துறைக்கு கிடைத்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சரவணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரவணன் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.