உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை அளவற்ற ஆரோக்கிய நன்மைகளை தரும் எண்ணெய் குளியல் பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
இன்றைய தலைமுறையினருக்கு மத்தியில் தீபாவளிக்கு மட்டுமே நினைவுக்கு வருகிற விஷயமாக மாறி விட்டது எண்ணெய் குளியல். ‘தலை வலி வரும், ஜலதோஷம் பிடிக்கும், முகமெல்லாம் எண்ணெய் வழியும் இப்படி எண்ணெய் குளியலைத் தவிர்க்க எத்தனையோ காரணங்கள். எண்ணெய் குளியலைத் தவிர்க்க எத்தனையோ காரணங்கள் இருக்கலாம். ஏன் தவிர்க்கக்கூடாதுங்கிறதுக்கு ஒரே ஒரு காரணம்தான்… கூந்தலுக்கும் உடலுக்கும் மனதுக்கும் அது தரும் ஆரோக்கியம் ஏராளம்.
கால் லிட்டர் நல்லெண்ணெயில் 50 கிராம் ஓமம் போட்டுக் காய்ச்சி, வடிகட்டி வைக்கவும். தலைக்குக் குளிப்பதற்கு முன், இந்த எண்ணெயை வெதுவெதுப்பாக்கி, தலையில் தடவி, மசாஜ் செய்து வெந்நீரில் குளிக்கவும். தலை குளித்தால் உடனே ஜலதோஷம் பிடித்துக் கொள்பவர்களுக்கும், தும்மல் போடுவோருக்கும் இந்த வகையான எண்ணெய் குளியல் ஏற்றது. குளிர்ச்சியைக் கிளப்பாது. தலைமுடியை நன்கு கண்டிஷன் செய்வதோடு, முடியையும் அழகாக வைக்கும்.
அரை கப் ஆலிவ் ஆயிலில், உதிர்த்த புதிய பன்னீர் ரோஜா இதழ்கள் ஒரு கப் சேர்த்துக் காய்ச்சவும். அதை வடிகட்டி, தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும். இந்தக் குளியலின் மூலம் கூந்தலின் பளபளப்பு கூடும். கருப்பான கூந்தலாக இருந்தால் இன்னும் அடர் கருமையுடனும், பிரவுன் நிற கூந்தலாக இருந்தால் அழகிய பிரவுன் நிறத்துடனும் மாறும்.பாதாம் எண்ணெய், ஆலிவ் ஆயில், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஆகியவற்றில் தலா கால் கப் எடுத்து, அதில் 1 டீஸ்பூன் கல் உப்பு போட்டுக் காய்ச்சவும். இந்த எண்ணெயை தலை நிறைய சொதசொதவென தடவவும். இந்தக் குளியலின் மூலம் கண்களும் உடலும் குளிர்ச்சியடையும். ஒற்றைத் தலைவலி வராது. மன அழுத்தமும் படபடப்பும் நீங்கி, மன அமைதி கிடைக்கும். வாரத்தில் 2 நாட்கள் இப்படிக் குளிக்கலாம்.
எண்ணெய் குளியல் எடுப்பதால் ஒருவருக்கு ஜலதோஷம் பிடிக்காது. அதை ஒரு முறையான பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். தலைவலி இருப்பவர்கள், எண்ணெயில் நிறைய ஓமம் சேர்த்துக் காய்ச்சி உபயோகிக்கலாம். சைனஸ் அல்லது ஜலதோஷப் பிரச்னை இருந் தால், தலைக்குக் குளித்து முடித் ததும், ஈரம் போகத் துடைத்து, அகன்ற பற்கள் கொண்ட சீப்பால், சூடு கிளம்பும் அளவுக்கு நன்கு வாரி விட வேண்டும். எண்ணெய் குளியலே ஆகாது என்பவர்கள், சிறிதளவு தண்ணீரைக் கொதிக்க வைத்து, மேலே சொன்ன மூலிகைகளை ஒரு துணியில் மூட்டையாகக் கட்டிப் போட்டு, அதன் சாரம் இறங்கியதும், அந்தத் தண்ணீரைத் தலை குளிக்க உபயோகிக்கலாம்.
எண்ணெய் குளியலை முறைப்படுத்திக் கொண்டால் மன அமைதி கிடைக்கும். உடல் குளிர்ச்சியடையும். கண்கள் குளுமை பெறும். பொடுகு நீங்கும். அதன் விளைவாக இள நரை வராமலிருக்கும். முன்னந்தலையில் வழுக்கை விழாது. எண்ணெய் குளியலுக்கு பொடியே சிறந்தது.ஆனாலும், ஷாம்புதான் வேண்டும் என நினைப்பவர்கள், பொடியுடன் சில துளிகள் ஷாம்புவையும் சேர்த்துக் குளிக்கலாம். சிலருக்கு சுருட்டை முடி இருக்கும். முடி சுருண்டு மேலே இழுத்துக் கொள்ளும். அடிக்கடி எண்ணெய் குளியல் எடுத்து வந்தால், முடி நீண்டு நன்கு வளரும். ஏசி அறையில் வேலை செய்பவர்களுக்கு எண்ணெய் குளியல் மிகமிக அவசியம். வாரம் இருமுறை அவர்கள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது கூந்தல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.