இங்கிலாந்து அரச குடும்பத்தின் செங்கோலை அலங்கரிக்கும் உலகின் மிகப்பெரிய வைரம் ஒன்றை திருப்பி அளிக்க கோரி தென்ஆப்பிரிக்காவில் கோரிக்கைகள் வலுத்துள்ளன.
1905-ம் ஆண்டில் தென்ஆப்பிரிக்காவில் சுரங்கத்தில் இருந்து வைரம் ஒன்று அகழ்ந்து எடுக்கப்பட்டது. பின்னர் காலனி ஆட்சியாளர்கள் அதனை இங்கிலாந்து அரச குடும்பத்திடம் ஒப்படைத்து விட்டனர். கிரேட் ஸ்டார் என்றும் கல்லினன் 1 என்றும் அழைக்கப்படும் இந்த வைரம் பின்னர் அரச செங்கோலில் பதிக்கப்பட்டது. உலகின் மிக பெரிய வைரமான இது, 530.2 காரட் கொண்ட நீர் துளி வடிவிலானது.. இந்த வைரம் சிலுவையுடன் கூடிய செங்கோலில் சேர்க்கப்பட்டது.
இந்நிலையில், ராணி 2-ம் எலிசபெத் மறைவை அடுத்து, இந்த கல்லினன் வைரம் தங்களுக்கு சொந்தம் என்றும் அதனை உடனடியாக திருப்பி ஒப்படைக்கும்படியும் தென்ஆப்பிரிக்கா வேண்டுகோள் விடுத்து உள்ளது. சமூக ஊடகங்களில் பல பயனர்கள், இங்கிலாந்து அரச குடும்பத்தின் கைவசம் உள்ள தங்களது நாடுகளின் பல்வேறு வைரங்களை திருப்பி ஒப்படைக்கும்படி கோரி வலியுறுத்த தொடங்கியுள்ளனர். அவற்றில் தென் ஆப்பிரிக்க நாடும் இணைந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ள தென் ஆப்பிரிக்கர் ஒருவர் “ எங்கள் நாடு மற்றும் பிற நாடுகளின் கனிமங்களை மக்களின் இழப்பில் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. நாங்கள் வெட்கக்கேடான வறுமையில் இருக்கிறோம், இங்கிலாந்து அரசக் குடும்பத்தின் முன்னோர்கள் ஏற்படுத்திய அடக்குமுறை மற்றும் பேரழிவின் காரணமாக நாங்கள் வெகுஜன வேலையின்மை மற்றும் அதிகரித்து வரும் குற்றங்களின் நிலைகளுடன் இருக்கிறோம்.
கல்லினன் வைரம் உடனடியாக தென்னாப்பிரிக்காவிற்கு திரும்ப வழங்கப்பட வேண்டும்..” என்று பதிவிடுட்டு உள்ளார்.. மேலும் தென்னாப்பிரிக்க அருங்காட்சியகத்தில் அந்த வைரத்தை வைக்கக் கோரும் மனுவில் இதுவரை 6,000 க்கும் மேற்பட்ட கையொப்பங்கள் பெறப்பட்டுள்ளன..