குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 1.15 கோடி பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித் தொகையை அன்றாடச் செலவிற்கும், சேமிப்பிற்கும் பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடு செய்ய 17-ம் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மகளிர் உரிமை தொகை திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்கள் நடைபெறுவதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வந்தது. இத்தகவலை உண்மை என நம்பிய விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன் குவிந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்துப் பார்த்ததில் அப்படி எவ்வித முகாமும் நடைபெறவில்லை என்று அறிந்த அந்தப் பெண்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் சேர சிறப்பு முகாம் நடைபெறுவதாக வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி முற்றிலும் வதந்தியே என விழுப்புரம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேபோல மதுரை மாவட்டத்திலும் மக்கள் மாவட்ட ஆட்சியர் குவிந்தனர். இதை எடுத்து போலியான தகவல் என தெரிய வந்ததை அடுத்து அவர்கள் திரும்பி சென்றனர்.