தமிழ்நாட்டில் கடந்த 23ஆம் தேதி பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டுத் தேர்வு முடிந்து, 24ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பிறகு அடுத்த மாதம் (ஜனவரி 2) மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக, சில தனியார் பள்ளிகள் இந்த விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தி வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதனால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவதாகவும், ஓய்வே இல்லாமல் படிப்பதால் மாணவர்கள் சோர்ந்து போகும் சூழ்நிலை உருவாகும் என்றும் பெற்றோர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அரசு அறிவித்துள்ள விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், ஒரு சில தனியார் பள்ளிகள் இந்த உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து சிறப்பு வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னை உயர்நீதிமன்ற கிளையில் மொஹைதீன் அப்துல் காதர் என்பவர் தனது இரு மகள்கள் சிறப்பு வகுப்புகளுக்கு காலாண்டு மற்றும் அரையாண்டு விடுமுறையின்றி வருகைப்புரிந்தால் மட்டுமே கோல்டன் ஜூப்ளி பள்ளியில் படிக்க அனுமதிக்க இயலும் என்று எழுதி வாங்கப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பள்ளி நிர்வாகத்தால், சிறப்பு வகுப்புகளுக்கு வருகைப் புரிவது கட்டாயமில்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்று தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் உரிய அறிவுரை வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தனியார் பள்ளிகள்) அறிவுறுத்தப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தனியார் பள்ளிகள் அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அரையாண்டு விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என்றும் அவ்வாறு நடத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதுதொடர்பான உத்தரவை முறையாக பின்பற்ற அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், கல்வித் துறை அறிவுறுத்தியியுள்ளது குறிப்பிடத்தக்கது.