சென்னை காவல் துறையில் புனித தோமையர்மலை மோட்டார் வாகன பிரிவில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றியவர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் இவர் கடந்த 2021 ஆம் ஆண்டில் ஒரு பெண்ணிடம் தான் உயர் போலிஸ் அதிகாரியாக இருப்பதாகவும், அந்த பெண்ணின் குடும்ப பிரச்சினையை தீர்த்து வைப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்து அந்த பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது.
அத்துடன் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து கணவன், மனைவி போல் இருவரும் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு ஆண்ட்ரூஸ் கால்டுவெல் அந்த பெண்ணை திருமணம் செய்வதற்கு மறுத்ததோடு அந்த பெண்ணை நிராகரித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் காவல்துறை துணை ஆய்வாளர் மீது கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 27ஆம் தேதி பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். அதன்படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த விசாரணையில், ஆண்ட்ரூஸ் கால்டுவெல் மீதான குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்ததைத் தொடர்ந்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்றதன் காரணமாக, அப்போது அவர் கைது செய்யப்படவில்லை. ஆனால் அவர் காவல்துறையின் பணியாற்றிக் கொண்டு பெண்ணிடம் மோசடி செய்தது ஒழுங்கீனமான நடவடிக்கையாக கருதப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சென்ற ஆண்டு ஜூன் மாதம் 2ஆம் தேதி சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து, நடைபெற்ற துறை ரீதியான விசாரணைகளுக்கு ஆஜராகாமல் இருந்து வந்தார். அதோடு அவருடைய முன்சாமின் மனுவை உச்சநீதிமன்றம் தளபதி செய்தது இதனைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டார்.
இத்தகைய நிலையில் தான் மோட்டார் வாகன பிரிவு துணை ஆணையர் பரிந்துரையின் அடிப்படையில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் ஆண்ட்ரூஸ் கால்டுவெல்லை காவல்துறை பணியிலிருந்து நிரந்தரமாக பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.