இன்று காலை விண்ணில் ஏவப்பட்ட SSLV – D1 ராக்கெட்டின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த செயற்கைக்கோள்களால் இனி எந்த பயனும் இல்லை என அறிவித்துள்ளது.
இந்தியாவின் எஸ்.எஸ்.எல்.வி. (SSLV) ரக முதல் ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று காலை வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பி.எஸ்.எல்.வி மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளை போல் பெரிய ரகமாக இல்லாமல் சிறிய அளவில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த SSLV ரக ராக்கெட்டை ஏவுவதற்கு 6 மணி நேரம் கவுண்ட்டவுன் போதும் என இஸ்ரோ அறிவித்தது. அதன்படி, இதற்கான கவுண்ட்டவுன் தொடங்கி, காலை 9.18 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இந்த SSLV ரக ராக்கெட்டில், 145 கிலோ எடை உடைய, பூமியை கண்காணிக்கக் கூடிய இ.ஓ.எஸ் – 02 செயற்கைக்கோள் மற்றும் 8 கிலோ எடையிலான ஆசாதிசாட் செயற்கைக்கோள் ஆகியவை விண்ணிற்கு அனுப்பப்பட்டன.

இந்த ராக்கெட் ஏவுவதற்கு தங்களின் பங்களிப்பை அளித்த கிராமப்புற பள்ளிகளைச் சேர்ந்த 750 மாணவிகளை, ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஏவப்பட்ட ராக்கெட்டின் தகவல் துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்திருந்த நிலையில், தற்போது இந்த செயற்கைக்கோள்களால் இனி எந்த பயனும் இல்லை என அறிவித்துள்ளது. ராக்கெட் மிஷன் தோல்விக்கு சென்சார் செயலிழப்பே காரணமாக இருக்கலாம் என்றும், மேலும் இதை பற்றி இஸ்ரோ ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.