புதுச்சேரியை அடுத்த அரியாங்குப்பம் பூங்கொடிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 39). இவரது மனைவி லூர்துமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 29ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ஞானசேகரன், அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், அரியாங்குப்பம் காவல் நிலையத்தில் மனைவி லூர்துமேரி புகார் அளித்தார். இதையடுத்து, வழக்குப்பதிவு செய்து போலீசார், மாயமான ஞானசேகரனை தேடிவந்தனர். ஞானசேகரனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது அவர் கடைசியாக பக்கத்து வீட்டை சேர்ந்த வியாபாரி செல்வம் (40) என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததால், போலீசார் அவர்களது பாணியில் விசாரணை நடத்தினர். அப்போது ஞானசேகரனை கத்தியால் வெட்டி கொலை செய்து புதைத்ததாக கூறினார். மேலும், கொலை செய்யப்பட்ட ஞானசேகரன் மனைவி லூர்துமேரிக்கும், செல்வத்துக்கும் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. இது ஞானசேகரனுக்கு தெரியவந்துள்ளது. அவர் இருவரையும் கண்டித்துள்ளார். அவர்கள் அதனை பொருட்படுத்தாமல் கள்ளத்தொடர்பை தொடர்ந்தனர்.
தொடர்ந்து கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் ஞானசேகரனை கொலை செய்ய 2 பேரும் திட்டம் தீட்டியுள்ளனர். சம்பவத்தன்று செல்வம், ஞானசேகரன் வீட்டுக்கு சென்று மதுகுடிக்க அழைத்துள்ளார். பின்னர், இருவரும் இருசக்கர வாகனத்தில் இடையார்பாளையம் அலுத்தவேலி காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு 2 பேரும் ஒன்றாக சேர்ந்து மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறியதும் செல்வம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஞானசேகரனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஞானேசகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தனது நண்பர் ஒருவரின் உதவியுடன் ஞானசேகரன் உடலை அங்கேயே குழிதோண்டி புதைத்து விட்டு இருவரும் தப்பியோடியுள்ளனர். இந்த வழக்கில் செல்வத்தையும், லூர்துமேரியையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள செல்வத்தின் நண்பரை தேடிவருகின்றனர். காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை மனைவி கொலை செய்த சம்பவம் அரியாங்குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.