நவ. 11ஆம் தேதி 10 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நாளை (நவ.9) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது இரண்டு நாட்களில் வலுப்பெற்று தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனவும் இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, நவம்பர் 11ஆம் தேதி தமிழகத்தில் 10 மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நவ.11ஆம் தேதி புயல் கரையை கடக்கக் கூடிய நிலையில், 10 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர். விடுமுறை அளிக்கப்பட்டாலும், அதனை ஈடுசெய்ய சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என தெரிகிறது.