சமூக வலைதளங்களில் தற்போது யார் வேண்டுமானாலும் யூடியூப் சேனல் தொடங்கலாம் என்ற நிலை உள்ளது. இதனால் பலர் தனியாக யூடியூப் சேனல் தொடங்கி தங்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் அரசுக்கு எதிராக மற்றும் நாட்டை சீர்குலைக்கும் வகையில் சர்ச்சை உண்டாக்கும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
இதனால் பல பிரச்சினைகள் உண்டாகிறது. மேலும் பார்வையாளர்களை அதிகரிக்க போலியான செய்திகளையும் வெளியிட்டு வருவதால் பொதுமக்கள் மத்தியில் தேவையில்லாத குழப்பமும் உண்டாகிறது. இந்த நிலையை, கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் முதல் 100-க்கும் அதிகமான யூடியூப் சேனல்கள் முடக்கப்பட்டுள்ளன.
இதில் பெரும்பாலான யூடியூப் சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயக்கப்பட்டது ஆகும். ஆனால் அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. இந்நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக போலி செய்திகளை பரப்பும் யூடியூப் சேனல்களை முடக்கவும், யூடியூப்பர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரவும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது.